கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x

கோப்புப்படம் 

கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய வழக்கை சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஸ்கரராமன், விகாஸ் மகாரியா, மன்சூர் சித்திக் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சோயிப் ஹுசைன், அரசு தரப்பு சிறப்பு வக்கீல் என்.கே.மட்டா ஆகியோர் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரினர்.

கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வக்கீல் ஹர்ஷ்தீப் சிங் குரானாவும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்க்கை சுட்டிக்காட்டியும், மனுதாரரின் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும், அந்த மனு வருகிற 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாலும், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அமலாக்கத்துறை கடந்த மார்ச் 19-ந்தேதி உறுதி அளித்திருப்பதாலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இது தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story