சிவமொக்காவில் காங்கிரஸ் பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை


சிவமொக்காவில்  காங்கிரஸ் பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

சிவமொக்காவில் கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் பிரமுகர்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஷராவதி நகரை சேர்ந்தவர் ஆர்.எம்.மஞ்சுநாத கவுடா. தற்போது இவர் சிவமொக்கா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பி.எச். சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை முறைகேடு செய்ததாக புகார் வந்தது.

அந்த புகாரின் பேரில் சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய மேலாளர், ஆர்எம். மஞ்சுநாத கவுடா உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஆர்.எம்.மஞ்சுநாத கவுடா உள்பட 5 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

காங்கிரசில் சேர்ந்தார்

அப்ேபாது, ஆர்.எம்.மஞ்சுநாத கவுடா பா.ஜனதாவில் இருந்தார். இதையடுத்து அவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஆர்.எம். மஞ்சுநாத கவுடா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் அவர் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் ஆர்.எம்.மஞ்சுநாத கவுடாவிற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. போலி நகை முறைகேடு வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த வாரம் சிவமொக்கா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மீண்டும் ஆர்.எம்.மஞ்சுநாத கவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே போலி நகைகளை வைத்து மோசடி செய்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருந்தது. அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை ஆர்.எம்.மஞ்சுநாத கவுடா சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனை

கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். அதாவது, ஷராவதி நகரில் உள்ள ஆர்.எம்.மஞ்சுநாத கவுடாவிற்கு சொந்தமான வீடு, தீர்த்தஹள்ளி பெட்டமக்கியில் வீடு, அலுவலகம் மற்றும் தீர்த்தஹள்ளி தாலுகா ஹனகெரேகட்டே பகுதியில் உள்ள பண்ணை வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story