சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு


சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
x

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாட்டின் சுதந்திர தினம் நேற்று வழக்கமான எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியை காண 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். செங்கோட்டை பகுதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜி-20 மாநாட்டின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு இருந்தது.

குடும்ப உறுப்பினர்கள்

தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

140 கோடி மக்களையும் எனது குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறேன். நான் உங்களிடம் இருந்து வந்தவன். உங்களை நேசிக்கிறேன். கனவு கண்டால் கூட உங்களுக்காக கனவு காண்கிறேன். உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன்.

நீங்கள் எனக்கு பொறுப்பு அளித்ததால் மட்டுமே இதை செய்யவில்லை. நீங்கள் எனது குடும்பம் என்பதால் செய்கிறேன். உங்கள் வேதனையை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. உங்கள் கனவுகள் நசுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

நான் மாற்றம் அளிப்பதாக கொடுத்த வாக்குறுதியின்பேரில், 2014-ம் ஆண்டு என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தீர்கள். அந்த வாக்குறுதி, நம்பிக்கையாக மாறியதால், 2019-ம் ஆண்டு என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன்.

தாரக மந்திரம்

'சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்' ஆகியவைதான் எனது தாரக மந்திரம். இவற்றால் இந்தியாவில் மாற்றம் உண்டானது. இந்தியாவை வளர்ந்த நாடாக்க, 'நேர்மை, வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற தன்மை' ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகள், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சிக்கான காலம். அவை நிச்சயம் பொற்காலமாக கருதப்படும்.

இன்னும் 5 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் உலகிலேயே 3-வது இடத்தை இந்தியா எட்டிப்பிடிக்கும். இது, மோடியின் உத்தரவாதம்.

1,000 ஆண்டு தாக்கம்

மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, நான் டெல்லி செங்கோட்டையில் இருந்து உங்கள் முன்பு உரையாற்றுவேன். அப்போது, நாட்டின் சாதனை அறிக்கையை வெளியிடுவேன்.

2047-ம் ஆண்டை நோக்கிய நமது பயணத்தில், இந்த காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிலையற்ற அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, 2014-ம் ஆண்டு இந்த அரசை மக்கள் முழு பெரும்பான்மையுடன் தேர்வு செய்தனர்.

ஊழல்

ஊழல், வாரிசு அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவை நாட்டுக்கு பெரும் தீமைகளாக உள்ளன. அவற்றுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு நனவாக வேண்டுமானால், ஊழல் எந்த வடிவில் வந்தாலும் சகித்துக்கொள்ளக்கூடாது.

கரையான் போல், நமது அமைப்பை ஊழல் அரித்துக்கொண்டிக்கிறது. அதற்கு எதிராக போராடுவது எனது வாழ்நாள் உறுதிப்பாடு. வாரிசு அரசியல், மக்களின் உரிமைகளை பறித்து விட்டது. சந்தர்ப்பவாதம், சமூக நீதி்க்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. வாரிசு அரசியலும், சந்தர்ப்பவாதமும் வளர்ச்சிக்கு பெரும் எதிரிகள்.

வாரிசு அரசியல் கட்சிகள், குடும்பத்துக்காக, குடும்பத்தால் நடத்தப்படுகின்றன.

வளர்ந்த நாடு

இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. 2047-ம் ஆண்டுக்குள், மக்களின் வலிமையால் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும்.

இந்தியா, பன்முகத்தன்மை கொண்ட நாடு. அனைத்து பிராந்தியங்களையும் நாம் சமச்சீராக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பலவீனமாகவே இருப்போம்.

உலக அளவில் பொருட்கள் வினியோக சங்கிலியில் இந்தியா ஒரு அங்கமாக இருக்கிறது. இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது என்று உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்கள் மட்டும் காரணம் அல்ல. இரண்டாம் நிலை நகரங்களின் இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் சமமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

உலகத்திலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடு, இந்தியா. இளைஞர்களுக்கான எனது செய்தி என்னவென்றால், இந்தியாவில் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை. நீங்கள் விரும்பும் அளவுக்கு வாய்ப்புகளை கொடுக்க நாடு தயாராக உள்ளது.

உலக நண்பன்

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுமையாக விடுபடவில்லை. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை உலகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. 220 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோரால்தான் இது சாத்தியமானது. கொரோனாவுக்கு பிறகு, இந்தியா 'உலக நண்பன்' ஆகிவிட்டது.

ஜி-20 மாநாடு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஓராண்டாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஜி-20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்தன. அவை சாமானிய இந்தியர்களின் திறமையையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட உலகத்துக்கு இந்தியா வழிகாட்டி இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story