சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்


சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்
x

கழிவு மேலாண்மையை முறையாக பராமரிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்து உள்ளது.



புதுடெல்லி,



தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு விதித்துள்ள உத்தரவில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை முறையாக பராமரிக்காமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக கர்நாடக அரசுக்கு ரூ.2,900 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைக்கான விதிகளை நடைமுறைப்படுத்துவது பற்றி இந்த தீர்ப்பாயம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, சுற்றுச்சூழலுக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்தி வரும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில், இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

இதன்படி, கர்நாடகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக திட கழிவு மேலாண்மை மற்றும் 5 ஆண்டுகளாக திரவ கழிவு மேலாண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் எந்தவித வெளிப்படையான நடவடிக்கையும் எடுத்த முடிவுகள் காணப்படவில்லை.

தொடர்ந்து வருங்காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கவும், கடந்த கால பாதிப்புகளை சீரமைக்கவும் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி ஏ.கே. கோயல் தெரிவித்து உள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த காலங்களிலும் இதுபோன்ற அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. திடக்கழிவு மற்றும் திரவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக, பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்துள்ளதுது.

அதற்கு முன்னதாக, திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையாக ரூ.3,000 கோடி வழங்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கவிட்டதற்கு 110 கோடியும், பதப்படுத்தப்படாத மரபுவழி திடக்கழிவுக்கு 10 கோடி என உத்தர பிரதேச அரசுக்கு ரூ.120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கழிவு மேலாண்மையில் கவனம் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்ததற்காக, மேற்கு வங்காள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் ரூ.3,500 கோடி அபராதம் விதித்தது கவனிக்கத்தக்கது.


Next Story