டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் சந்திரசேகர் ராவ் மகளுக்கு தொடர்பு - அமலாக்கத்துறை


டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் சந்திரசேகர் ராவ் மகளுக்கு தொடர்பு - அமலாக்கத்துறை
x

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன் மூலம் மாநிலத்தில் மதுபான விற்பனையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தனியார் லாபம் அடைவதற்காக அரசின் கருவூலம் மிகப்பெரிய பாதிப்பை அடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து இந்த கொள்கையை மாநில அரசு ரத்து செய்தது. ஆனால் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. அத்துடன் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்து உள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்பட பல்வேறு நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களது வீடுகளில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.

சந்திரேசகர் ராவின் மகள்

மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், அதன் எல்லை தற்போது தெலுங்கானா வரை நீண்டு இருக்கிறது. அதாவது தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது. அமித் அரோராவை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இது கூறப்பட்டு உள்ளது.

அதாவது கவிதா மற்றும் சரத்ரெட்டி, மகுந்தா சீனிவாசலு ரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருக்கும் சவுத் குரூப் என்ற குழுமத்திடம் இருந்து அமித் அரோரா மூலம் ரூ.100 கோடி வரை ஆம் ஆத்மி தலைவர்களுக்காக விஜய் நாயர் என்பவர் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரம் டெல்லி மற்றும் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும்

ஆனால் இந்த விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாக சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அறிவித்து உள்ளார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

எந்த வகையான விசாரணையையும் நாங்கள் எதிர்கொள்வோம். அதிகாரிகள் எங்களிடம் வந்து கேள்விகள் கேட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம். ஆனால் ஊடகங்களுக்கு குறிப்பிட்ட தகவல்களை கொடுத்து தலைவர்களின் புகழை களங்கப்படுத்தினால், மக்கள் அதை ஏற்கமாட்டார்கள்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநில அரசுகளை கவிழ்த்துவிட்டு புறவாசல் வழியாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது. புத்திசாலித்தனமான தெலுங்கானா மக்களிடம் இது மிகவும் கடினம்.

தூக்கில் போடுவீர்களா?

எங்களை சிறையில் அடைப்பதாகச் சொன்னால் அதைச் செய்யுங்கள். என்ன நடக்கும்? பயப்பட ஒன்றுமில்லை. எங்களை தூக்கில் போடுவீர்களா? அதிகபட்சம் எங்களை சிறையில் அடைப்பீர்கள். அவ்வளவுதான்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மோடி செல்வதற்கு முன் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் செல்லும். ஆனால் மக்கள் நலனுக்காக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பாடுபடும் வரை இங்கு எதுவும் நடக்காது.

இவ்வாறு சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கூறினார்.


Next Story