கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தியை விஷக்கன்னி என சாடினார், முன்னாள் பா.ஜ.க. மந்திரிகாங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்


கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தியை விஷக்கன்னி என சாடினார், முன்னாள் பா.ஜ.க. மந்திரிகாங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 28 April 2023 11:45 PM GMT (Updated: 28 April 2023 9:19 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தியை விஷக்கன்னி என முன்னாள் பா.ஜ.க. மந்திரி சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தியை விஷக்கன்னி என முன்னாள் பா.ஜ.க. மந்திரி சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நாள்தோறும் அனல் வீசிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சித்தலைவர் கார்கே, விஷப்பாம்பு என்று விமர்சித்த சுவடு மறைவதற்குள், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என கர்நாடக பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பசன்கவுடா பாட்டீல் யத்னால் விமர்சித்து இருப்பது பெருத்த சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டம், யாலபுர்காவில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பசன்கவுடா பாட்டீல் யத்னால் பேசும்போது, சோனியா காந்தியை விஷக்கன்னி என்று சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்தது. ஆனால் இன்றைக்கு அவர் உலகத் தலைவராக உருவாகி இருக்கிறார். சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை விஷப்பாம்புடன் ஒப்பிடுகிறார்கள். உங்கள் கட்சித்தலைவர் சோனியா காந்தி ஒரு விஷக்கன்னி. நாட்டை சீரழித்த சோனியா காந்தி சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜெண்டாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் தங்கள் மனம் மற்றும் அரசியல் சமநிலையை இழந்துவிட்டார்கள். சோனியா காந்திக்கு எதிரான யத்னாலின் கருத்துக்கள் மிக மோசமானவை. அவதூறானவை. பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பிரதிநிதியாக இதைச் சொல்லி இருக்கிறார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முழுமையான தோல்வியை எதிர்கொள்ள உள்ள நிலையில், பா.ஜ.க.வின் தலைமை விரக்தி அடைந்து, காங்கிரஸ் தலைமையை இழிவுபடுத்தும் வகையில், அவர்களின் அசிங்கமான குணம் மற்றும் அழுக்கு மனப்பான்மையின் விளைவாக, சேற்றை வாரி வீசுகிறது. அவர்கள் அனைத்து அரசியல் சமநிலை, கண்ணியம் மற்றும் அலங்காரத்தின் கடைக்கோடி துளியைக் கூட இழந்து உள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஆதரவினால், பா.ஜ.க. தலைவரும், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமானவருமான பசன்கவுடா பாட்டீல் யத்னால், மிக மிக தரம் இறங்கி உள்ளார். அதனால்தான் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்றும், சீனா மற்றும் பாகிஸ்தான் ஏஜெண்டு என்றும் சாடி உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடியும், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் சோனியா காந்தியிடமும், காங்கிரஸ் தலைவரிடமும் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில் அவர், " ஒவ்வொரு தேர்தலின் போதும், சோனியா காந்தியை அவமதிக்க புதிய அவதூறுகளை வீசுகிறார்கள். சோனியா காந்தியைப் பொறுத்தமட்டில் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மிகுந்த கண்ணியத்துடனும். கருணையுடனும் நடந்து கொள்கிறவர். எங்கள் தலைவர்களுக்கு எதிரான அசிங்கமான வார்த்தைகளால் பா.ஜ.க. தொடர்ந்து தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே, இந்த வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?" என கேட்டுள்ளார்.


Next Story