ஐ.டி. நிறுவன எம்.டி, சிஇஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை - முன்னாள் ஊழியர் வெறிச்செயல்


ஐ.டி. நிறுவன எம்.டி, சிஇஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை - முன்னாள் ஊழியர் வெறிச்செயல்
x

ஐ.டி.நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் அதிகாரி முன்னாள் ஊழியர் அலுவலகம் புகுந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐடி நிறுவனம் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தின் தலைவராக (எம்.டி) பனிந்திர சுப்ரமணியன், தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) வினு குமார் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இருவரும் இன்று அலுவலகத்தில் இருந்தபோது அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிளிக்ஸ் என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

இந்த சம்பவத்தால் நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை வாளால் வெட்டிய முன்னாள் ஊழியர் பிளிக்ஸ் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிறுவனத்தின் எம்.டி. சுப்ரமணியன், சிஇஓ வினு குமாரை மீட்ட ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஐடி நிறுவன முன்னாள் ஊழியர் பிளிக்சை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலையாளி பிளிக்ஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து விலகி தனியே தொழில் நடத்தி வந்துள்ளார். அந்த தொழிலில் அவர் வேலை செய்த முன்னாள் நிறுவனத்தின் எம்.டி. சுப்ரமணியன், சிஇஓ வினு குமார் தலையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தொழிலில் தலையிட்டதால் இருவரையும் பிளிக்ஸ் கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story