கேராளாவில் டிவி நேரலையில் பங்கேற்றவர் பேட்டியின் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்


கேராளாவில் டிவி நேரலையில் பங்கேற்றவர் பேட்டியின் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்
x
தினத்தந்தி 13 Jan 2024 2:39 AM GMT (Updated: 13 Jan 2024 2:42 AM GMT)

கேரளாவில் தூர்தர்ஷன் டிவியில் விவசாயம் தொடர்பாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவனந்தபுரம்,

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக பிராந்திய மொழிகளில் தொலைகாட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் மலையாள மொழியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. இதில், கேரள விவசாய பல்கலைக்கழகத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் அனி எஸ். தாஸ் (வயது 59) என்பவரும் பங்கேற்று இருந்தார்.

மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அப்போது விவசாயம் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமாக பதிலளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென நேரலையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் தாஸ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிவி நேரலையின் போது பேசிக்கொண்டு இருந்தவர் அங்கேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகமும் ஏற்படுத்தியது.


Next Story