தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது? - குழந்தைகள் உரிமை ஆணையம் கேள்வி


தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது?  - குழந்தைகள் உரிமை ஆணையம் கேள்வி
x

Image Courtacy: PTI

தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டை இந்தியாவில் இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் இன்றைய இளந்தலைமுறையினரை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. நேரம் காலம் பார்க்காமல் அதில் மூழ்கச் செய்திருக்கின்றன.

இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி 'பப்ஜி' உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. ஆனாலும் இதுபோன்ற விளையாட்டுகளை குழந்தைகளும், வாலிப வயதினரும் தொடர்ந்து விளையாடியே வருகின்றனர்.

கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில், ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதை தடுத்த தாயை ஒரு சிறுவன் சுட்டுக்கொன்றான்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம், இணைய விளையாட்டுகளில் இன்றைய இளந்தலைமுறையினர் எந்த அளவு விழுந்துகிடக்கின்றனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருந்தது.

இந்நிலையில் இந்த விஷயத்தில் கவனத்தைச் செலுத்தியுள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

'உத்தரபிரதேசத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ள சூழலில், அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது, அது எப்படி இளஞ்சிறார்களுக்கு கிடைக்கிறது என்று எங்களுக்கு புரியவில்லை. எனவே, இணையத்தில் இந்த விளையாட்டுகள் கிடைப்பதற்கான காரணங்களை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இதுபோன்ற சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சிறுவர்கள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளின் பட்டியலுடன் 10 நாட்களில் விளக்கத்தை அளிக்க வேண்டுகிறோம்.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும்...

அதேபோல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், 'மின் விளையாட்டுகளில் ஒன்றாக 'பப்ஜி' அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இந்த விளையாட்டை அங்கீகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் 'பப்ஜி' போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ளதா? இதுகுறித்த விளக்கத்தை 10 நாட்களுக்குள் தெரிவிக்கவும்' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story