போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்


போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

சிட்லகட்டா போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் விளக்கினார்.

சிட்லகட்டா

போலீஸ் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 'ஓபன் ஹவுஸ்' திட்டத்தின் கீழ் மாணவர்களை போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து போலீசாரின் செயல்பாடுகள், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, போக்சோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா போலீஸ் நிலையத்துக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிட்லகட்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

அதாவது, வழக்குப்பதிவு செய்வது, விசாரணை நடத்துவது, விசாரணை அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தல், விசாரணையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், சட்டத்தை மதித்து, அரசியல் சாசன விருப்பப்படி நடப்பவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு எப்போதும் உண்டு. அப்போது தான் சமுதாயத்தில் நல்ல பெயரும், மரியாதையும் கிடைக்கும். படிக்கும் பருவத்தில் பாதை தவறி செல்லக்கூடாது.

படிக்கும் பருவத்தில் பாதை தவறினால், வளர்ந்த பிறகு போலீஸ் நிலையத்துக்கு கைதியாக தான் வர வேண்டும். சமூகத்தில் காரணமே இல்லாமல் போலீஸ் துறை பற்றி தவறான எண்ணங்கள் உள்ளன.

ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே போலீஸ் துறையின் முக்கிய நோக்கமாகும். பள்ளி குழந்தைகள் படிப்போடு, அரசியல் சட்டத்தையும் படிக்க வேண்டும் என்றார்.


Next Story