பத்ராவதியில் 'லிப்ட்' கேட்ட வாலிபரிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது
பத்ராவதியில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரிடம் பணம் பறித்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ரவீந்திர யாதவ் (வயது 35). இவர் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவீந்திர யாதவ், சிவமொக்கா சாலையில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்களிடம் ரவீந்திர யாதவ், 'லிப்ட்' கேட்டார். அப்போது அந்த நபர்கள், ரவீந்திர யாதவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று அவரை மிரட்டி பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ரவீந்திர யாதவ், பத்ராவதி நியூடவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரவீந்திர யாதவை மிரட்டி பணம் பறித்த சந்தேமட்டியை சேர்ந்த சேத்தன் (வயது 21), கீர்த்தன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள், ஒரு ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.