"குற்றவாளிகள் விடுதலைக்கு பிறகு பயம் அதிகரித்துவிட்டது"- பில்கிஸ் பானு கணவர் அதிருப்தி


குற்றவாளிகள் விடுதலைக்கு பிறகு பயம் அதிகரித்துவிட்டது- பில்கிஸ் பானு கணவர் அதிருப்தி
x

Image Courtesy: PTI

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிறகு பயம் அதிகரித்துள்ளதாக பில்கிஸ் பானுவின் கணவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிறகு பயம் அதிகரித்துள்ளதாக பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் படேல் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "முன்பு, பயம் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது, 11 குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பயம் மிகவும் அதிகரித்துள்ளது. நாங்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் வருத்தமாகவும் இருக்கிறோம். இந்த சம்பவத்தில் நாங்கள் அனைத்தையும் இழந்தோம், எங்கள் மூன்று வயது மகள் கொல்லப்பட்டார்.

பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அப்படி ஒரு மோசமான சம்பவத்தை பில்கிஸ் எதிர்கொண்டார். இன்றும், ஒவ்வொரு நாளும், இறந்த எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்." என தெரிவித்தார்.


Next Story