கர்நாடகா சர்வதேச விமான நிலையத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவின் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதனை எடுத்து பேசிய அதிகாரியிடம், மறுமுனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
உடனடியாக இந்த விவகாரம் விமான நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் விமான நிலையத்தில் 2 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.
இதில், வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என தெரிய வந்தது.
இதுபற்றி பெங்களூரு வடகிழக்கு பிரிவு துணை காவல் ஆணையாளர் அனூப் ஷெட்டி கூறும்போது, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனை செய்தோம். காலை 7 மணி வரை நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதுபற்றி மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.