திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது


திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது
x

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை சேர்ந்தவர் நிகில் (வயது 23). அப்பகுதியை சேர்ந்த நீனு, சரஸ்வதி ஆகியோர் திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாக்டர் உடையணிந்து வாலிபர் வந்தார். அவர் மேற்கண்ட 2 பெண்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து உள்ளார். மேலும் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுத்து சென்று, அதன் முடிவை கொண்டு வந்து கொடுத்தார்.

மருத்துவ பரிசோதனை செய்ததாக கூறி 2 பெண்களிடம் வாலிபர் பணம் பெற்று உள்ளார். இந்தநிலையில் நீனு, சரஸ்வதி ஆகிய 2 பேரின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக தலைமை டாக்டர் வந்தார். பெண்கள் சிகிச்சை பெற்று வரும் படுக்கைகளில் இருந்த குறிப்பு அட்டையை பார்த்த போது, அதில் சில மருத்துவ குறிப்புகள் தவறாக குறிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அதில் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த வாலிபர் போலி டாக்டர் நிகில் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட வெளிப்புற போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் 2 பெண்களிடம் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி ரத்தம் மாதிரி சேகரித்ததும், அதற்காக பணம் பறித்ததும் தெரியவந்தது.

மேலும் அதிக நோயாளிகள் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் உடையில் வந்து 10 நாட்களாக சிகிச்சை அளிப்பதாக உலா வந்து உள்ளார். தொடர்ந்து பிளஸ்-2 வரை படித்த போலி டாக்டர் நிகிலை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story