அரியானாவில் போலி ரசீது... ரூ.3 கோடி சுருட்டிய போலீஸ் கான்ஸ்டபிள்கள்

அரியானாவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் போலி ரசீது வழியே ரூ.3 கோடி சுருட்டிய விவரம் தெரிய வந்து உள்ளது.
சண்டிகர்,
அரியானாவில் போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜனக். இவரிடம் போலீஸ் சூப்பிரெண்டு லோகேந்திர சிங், நடப்பு ஆண்டு மே மாதத்தில் விதிக்கப்பட்ட வாகனங்களுக்கான அபராத தொகை பற்றிய அறிக்கை ஒன்றை கேட்டார்.
ஆனால், அறிக்கையை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், வசூலித்த அபராத தொகைக்கும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி எஸ்.பி. சிங் விசாரணைக்கு உத்தரவிட்டதில், மோசடி ஆவணங்களை பயன்படுத்தியும், போலியான ரசீதுகளையும் கொண்டு ரூ.3 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 150 வரை மோசடி செய்தது தெரிய வந்து உள்ளது.
இந்த சம்பவத்தில், கான்ஸ்டபிள் ஜனக் உடன் சேர்ந்து ஓம்பீர் என்ற மற்றொரு கான்ஸ்டபிளும் அரசு வருவாயை தவறாக பயன்படுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த தொகையை அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கு பதிலாக அவர்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி வந்து உள்ளனர். இதில், போலி ரசீது பயன்படுத்தி இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என எஸ்.பி. கூறியுள்ளார்.
விசாரணையின்படி, கான்ஸ்டபிள் ஜனக் அவரது பணியின்போது மொத்தம் ரூ.3.22 கோடி தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை. இதேபோன்று, கான்ஸ்டபிள் ஓம்பீர் ரூ.12,700 தொகையை அவரது பணி காலத்தின்போது வங்கி கணக்கில் செலுத்தவில்லை என தெரிய வந்து உள்ளது. 2 கான்ஸ்டபிள்கள் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான தலைமை கான்ஸ்டபிள் ஜனக், போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.






