தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு முல்பாகலில் விவசாயிகள் போராட்டம்


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு முல்பாகலில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தொிவித்து முல்பாகலில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்பாகல

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு உடனே நிறுத்தவேண்டும். அதற்கான சட்டபோராட்டங்களை கையில் எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.

இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதன் மூலம் அணைகளில் நீர் மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் நாட்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு காவிரி நீர் பங்கிடுவதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கூறினர். மேலும் இது தொடர்பாக தாசில்தார் ரேகாவை சந்தித்த விவசாயிகள் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவை பெற்று கொண்ட தாசில்தார், கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story