மைசூருவில் முழுஅடைப்புக்கு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது


மைசூருவில் முழுஅடைப்புக்கு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:45 PM GMT)

மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மைசூரு

முழுஅடைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காவரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் காவிரி போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கர்நாடகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதேபோல் மைசூரு மாவட்டத்திலும் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடந்தது.

பஸ்கள் ஓடவில்லை

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை முழு அடைப்பு மாவட்டம் முழுவதும் நடந்தது. அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நடமாடி கொண்டிருந்தன.

மைசூரு டவுன் பகுதியில் மட்டும் ஆட்டோ,. வாடகை கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மருத்துவ மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மைசூரு- பெங்களூரு சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது. அதுபோல் மைசூரு டவுன் பஸ் நிலையம் பொதுமக்கள், பஸ்கள் இன்றி காணப்பட்டது.

அங்கு ஒரு பயணிகள் மட்டுமே நின்றன. அவர்கள் வாடகை கார் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பஸ் நிலையங்கள், முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அரண்மனை, உயிரியல் பூங்கா

சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் அரண்மனை, உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

மைசூரு டவுன் பகுதியில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் காந்தி சவுக்கில் உள்ள காந்தி சிலை முன்பு ஜெயின் அமைப்பினர், கன்னட அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது காலிகுடங்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவபடத்தை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அவர்களையும் போலீசார் கைது செய்து போலீஸ் பயிற்சி மைதானத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

கடைகள் திறந்து இருந்தன

என்.ஆர். மொகல்லா, மண்டி மொகல்லா, விஜயநகர், குவெம்பு நகர், ஒண்டி கொப்பல், கே.ஜி. கொப்பல், சித்தார்த்த நகர், உதயகிரி, காந்திநகர், அசோகபுரம் ஆகிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தன. மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டது.

மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று மைசூரு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி நடந்தது.


Next Story