6 மாத விரதம்; மதநம்பிக்கை சார்ந்த உணவு வழங்க கோரி சத்யேந்தர் ஜெயின் மனு


6 மாத விரதம்; மதநம்பிக்கை சார்ந்த உணவு வழங்க கோரி சத்யேந்தர் ஜெயின் மனு
x

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மத நம்பிக்கைகள் சார்ந்த பழம், காய்கறி, உலர் பழங்கள் உள்ளிட்ட அடிப்படை உணவுகளை வழங்க கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மந்திரியான சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து, கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.

இதனால், அவர் வகித்து வந்த சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்கள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி மந்திரியாக ஜெயின் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.

சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என கூறியது. தவிர, டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி என்று சிறை வட்டாரம் தெரிவித்து உள்ளது மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இவரது ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு கடந்த 17-ந்தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது மதநம்பிக்கைகள் சார்ந்த பழங்கள், காய்கறிகள், கலப்பு விதை வகைகள், உலர் பழங்கள் மற்றும் பேரீச்சை பழங்கள் ஆகிய அடிப்படை உணவுகளை தனக்கு வழங்காமல் அவற்றை சிறை நிர்வாகம் நிறுத்தி விட்டது என தெரிவித்து உள்ளார்.

அதில், கடந்த 6 மாதங்களாக மதம் சார்ந்த விரதத்தில் விண்ணப்பதாரர் இருந்து வருகிறார். அதனால், ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையான இந்த அடிப்படை உணவு வகைகள் தனக்கு தேவையாக உள்ளது. மதம் சார்ந்த இந்த விரதத்தினால், புரதம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட கூடிய தீவிர ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார். சத்யேந்தர் ஜெயினின் உணவு மற்றும் சுகாதார நிலை தொடர்புடைய விவகாரத்தில் பதிலளிக்கும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story