உ.பி. சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தந்தை, மகன் பலி... 2 சிறுமிகள் படுகாயம்
உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் பிசௌலி கோட்வாலி பகுதியின் பனௌரி கிராமத்தைச் சேர்ந்த பப்பு சிங் (50). இவர் தனது மகன் அவிச்சலை அங்குள்ள பள்ளியில் (14) ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துவிட்டு மகனுடன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மடஞ்சுடி கிராமம் அருகே தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பப்பு சிங்கின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பப்பு சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது, பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பனௌரி கிராமத்தைச் சேர்ந்த காஜல் மற்றும் ரீட்டா என்ற இரண்டு சிறுமிகளும் கட்டுப்பாட்டை மீறிய பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு, பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. மேலும் பேருந்தின் டிரைவர் மற்றும் கிளீனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.