காபு அருகே தந்தை-மகன் பலி; விபத்து ஏற்படுத்திய லாரியை சிறுவன் ஓட்டியது அம்பலம்

காபு அருகே தந்தை-மகன் பலியானதில் விபத்தை ஏற்படுத்திய லாரியை கிளினரான சிறுவன் ஓட்டியது அம்பலமானது. இதுதொடர்பாக டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு;
தந்தை-மகன் பலி
பெலகாவியை சேர்ந்தவர் பிரபாகர் கோத்தா. இவரது மகன் சமர்த்(வயது 14). இந்த நிலையில் பிரபாகர் கடந்த 14-ந்தேதி தனது மகனை உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ப்பதற்காக வந்து இருந்தார். அப்போது தாய்-மகன் 2 பேரும் அங்குள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த பிரபாகர் மற்றும் சம்ர்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகர் கோத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் சமர்த் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி சமர்த் உயிரிழந்தான்.
சிறுவன் ஓட்டியது அம்பலம்
இதுகுறித்து தகவல் அறிந்து படுபித்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை சோதனை நடத்தினர். அதில் மங்களூருவில் இருந்து குஜராத்திற்கு பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசார் அந்த லாரி டிரைவர் சேகர் என்பரை கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், லாரியை கிளீனரான 16 வயது சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையத்து சிறுவனை பிடித்து போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.






