ஜம்மு-காஷ்மீர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; கூடுதலாக 7.72 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு


ஜம்மு-காஷ்மீர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; கூடுதலாக 7.72 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு
x

ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 7.72 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் இதர தேர்தலில் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் ஜம்மு-காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் யாராயினும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் யாராயினும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ந்த்துக்கொள்ளலாம் எனவும் அதற்கு ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர் என்ற சான்றிதழ் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெறலாம். அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இறுதி வாக்காளர் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார். அதில், ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 வாக்காளர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

7 லட்சத்து 72 ஆயிரத்து 872 வாக்காளர்களுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 83 லட்சத்து 59 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 42 லட்சத்து 91 ஆயிரத்து 687 பேர், பெண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 67 ஆயிரத்து 900 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 184 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story