காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - மீட்புப்பணி தொடருகிறது!


காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு - மீட்புப்பணி தொடருகிறது!
x

இதுவரை மொத்தம் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட கூனி நல்லா பகுதிக்கு அருகே புதிதாக சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். இதில் ராட்சத எந்திரங்கள் மற்றும் லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கே பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் சுரங்கப்பாதை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

உடனே சக தொழிலாளர்கள் அதில் 3 பேரை மீட்டனர். அதேநேரம், இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

மீதமுள்ள 9 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே தொடங்கிய இந்த பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகிறது.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் நேபாளத்தை சேர்ந்த 2 பேரும் இதில் அடங்குவர்.

இந்த சுரங்கப்பாதையின் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த மீட்புப் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.


Next Story