குஜராத்தில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 27 பேர் பத்திரமாக மீட்பு


குஜராத்தில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 27 பேர் பத்திரமாக மீட்பு
x

குஜராத்தில் பிரபல ஓட்டல் அரபி கடலோரம் பெரிய தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 4 தளங்களை கொண்ட பிரபல ஓட்டல் அரபி கடலோரம் பெரிய தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ஓட்டலின் கீழ்தளத்தில் திடீரென தீ பிடித்தது. அடுத்த சில நிமிடங்களில் மற்ற தளங்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்த ஓட்டல் அறைகளில் தங்கி இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

கொழுந்து விட்டு எறிந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஓட்டல் அறைகளில் சிக்கியிருந்த 27 பேரை பத்திரமாக மீட்டனர்.

அவர்களில் 3 பேருக்கு மட்டும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனிடையே மின் கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து நடந்த ஏற்பட்ட ஓட்டலுக்கு மிக அருகில் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், நயாரா கேஸ் எனர்ஜி, குஜராத் மாநில உர கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story