வடகிழக்கு டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி, 6 பேர் காயம்
வடகிழக்கு டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்வெர்ட்டர்கள் மற்றும் ஸ்டெபிலைசர்கள் போன்ற எலக்ட்ரிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் இன்று மதியம் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
மதியம் சுமார் 12.17 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஏழு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. மதியம் 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 7 பேர் ஜிடிபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் மற்றொருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.