பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து: இளம்பெண் உள்பட 3 பேர் கவலைக்கிடம்


பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து: இளம்பெண் உள்பட 3 பேர் கவலைக்கிடம்
x

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தீவிபத்தில் இளம்பெண் உள்பட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:-

10 பேர் காயம்

பெங்களூரு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் மனோஜ்(வயது 32), கிரண்(35), சீனிவாஸ்(37), சிராஜ்(29), ஸ்ரீதர்(38), சிவக்குமார்(40), சந்தோஷ் குமார்(47), விஜயமாலா(27), ஜோதி(21) ஆகிய 9 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதுபற்றிய தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆய்வகத்தில் இருந்த ரசாயன பொருட்கள் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. இந்த நிலையில் தீவிபத்து தொடர்பாக மாநகராட்சி என்ஜினீயர்களான ஆனந்த், சுவாமி மற்றும் ஊழியர் சுரேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது, அந்த பகுதியில் இவர்கள் தான் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் கவுடா உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசியல் குற்றச்சாட்டுகள்

மாநகராட்சி கட்டிடத்தில் நடைபெற்ற தீவிபத்துக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது மாநகராட்சி கட்டிடத்தில் தான் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது எழுந்துள்ள கமிஷன் போன்ற முறைகேடு புகார்களை விசாரிக்க தேவையான ஆவணங்களும் அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே முறைகேடு விவகாரத்தில் ஆவணங்களை அழிக்க முயன்றதாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றன.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'ரசாயன வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால், அந்த அறையில் இருந்தவர்களில் 4 பேருக்கு 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உடலில் ஒரு சில இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 2 இளம்பெண்களும் அடங்குவர். முகத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது' என்று கூறி உள்ளனர்.

இது ஒரு விபத்து

இதுகுறித்து மாநகராட்சி முதன்மை என்ஜினீயர் பிரகலாத் கூறுகையில், 'மாநகராட்சி அலுவலக ஆய்வகத்தில், ராசாயன சோதனை நடைபெற்றது. அப்போது பென்சைன் எனப்படும் ரசாயனத்தை சோதனை செய்து கொண்டிருந்தபோது திடீரென அது வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு யாரும் காரணம் இல்லை. இது ஒரு விபத்து தான். ஆய்வு அறிக்கை தயாரான பிறகு உண்மை உறுதி செய்யப்படும்' என்றார்.

பசவனகுடி பகுதியில் இருந்து பெறப்பட்ட தாரை சோதனை செய்தபோது, அதில் இருந்த மூலக்கூறுகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக மாநகராட்சி முதன்மை உதவி என்ஜினீயர் ஆனந்த் என்பவர், மாநகராட்சி ஊழியர் அம்ரித்ராஜ் என்பவரிடம் செல்போனில் பேசிய உரையாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது. தீவிபத்து குறித்து போலீசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீக்காயம் அடைந்தவர்களில் ஜோதி என்ற இளம்பெண் உள்பட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story