பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு: 4 வீரர்கள் பலி - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு


பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு: 4 வீரர்கள் பலி - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
x

பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் யாரும் உள்ளே இல்லை.

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. சாப்பாட்டு கூடத்துக்கு பின்னால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. வேறு யாருக்கும் காயமோ, சொத்துகளுக்கு சேதமோ ஏற்படவில்லை என்று தென்மேற்கு ராணுவ தலைமையகம் தெரிவித்தது.

மேலும், தகவல் அறிந்து பஞ்சாப் போலீசாரும் விரைந்து வந்தனர். பதிண்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்காந்தி, விசாரணை குழுவுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளார். அனைத்து தடயவியல் உபகரணங்களுடன் முகாமுக்குள் சென்று ஆய்வு நடத்தினார். 'இன்சாஸ்' துப்பாக்கியின் 19 காலி தோட்டாக்கள் கீழே கிடப்பதை அவர் கண்டெடுத்தார். சாதாரண உடையில் 2 பேர் வந்து துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த ஒரு ராணுவ வீரர், அஜய்காந்தியிடம் தெரிவித்தார்.

ஆனால், யார் சுட்டது என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அஜய்காந்தி கூறினார். முகாமில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர் ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே, ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது. ராணுவ வீரர்களிடையே நிலவிய உட்பூசலால் துப்பாக்கி சண்டை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில கூடுதல் டி.ஜி.பி. பார்மர் கூறியதாவது:-

அது பயங்கரவாத தாக்குதல் அல்ல. வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவ வீரர்களின் சகோதர மோதல். இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதிண்டா மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு குல்நீத்சிங் குரானாவும் இதே கருத்தை தெரிவித்தார்.

பதிண்டா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குர்தீப்சிங் கூறியதாவது:-

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யார் சுட்டது என்று தகவல் கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் இருந்த ஒரு 'இன்சாஸ்' துப்பாக்கியும், 28 ரவுண்டு தோட்டாக்களும் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டன. அதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தோட்டா உறையும் இருந்தது. இரண்டும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்தான் எத்தனை தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன என்று தெரிய வரும். இந்த மோதலுக்கு 'இன்சாஸ்' துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மோதலுக்கான உண்மை காரணத்தை கண்டறிய போலீசுடன் இணைந்து ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. ராணுவ கோர்ட்டு விசாரணையும் நடத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களிடையே நடந்த உட்பூசலில் துப்பாக்கி சூடு நடந்ததாக முதலில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இன்னும் தெளிவற்ற நிலையே காணப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகாம் தொடர்ந்து 'சீல்' வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. சம்பவம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே விளக்கி கூறியுள்ளார்.


Next Story