முதலில் கணவர், பின் தந்தை... ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல பாதிப்பு; முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு


முதலில் கணவர், பின் தந்தை... ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல பாதிப்பு; முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு
x

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி பர்க்கா கூறி உள்ளார்.


புதுடெல்லி,


டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, எனது தந்தை சிறுமியாக இருந்தபோது என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து, துன்புறுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ, அப்போது நான் பயந்து போவேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன் என கூறினார்.

இதுபற்றி முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி பர்க்கா சுக்லா இன்று கூறும்போது, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை, உருளை கிழங்கு என ஸ்வாதி மாலிவால் கூறினார். கெஜ்ரிவாலுடனேயே அவர் வாழ வேண்டும். ஏனென்றால் உருளை கிழங்கும், சிப்சும் நண்பர்கள்.

அவருக்கு மனநல சமநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என நான் நினைக்கிறேன். அதனாலேயே இதுபோன்று ஸ்வாதி மாலிவால் பேசி வருகிறார். முதலில், தன்னை அடிக்கிறார் என கணவர் மீது அவர் பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகளை கூறினார். அதன்பின்னர் தற்போது, உயிரிழந்த அவரது தந்தையை இதுபோன்று குற்றஞ்சாட்டி வருகிறார்.

அவர் கூறுகின்ற குற்றச்சாட்டுகள், உலகில் எந்த பகுதியிலும் இல்லாதது ஆகும். அது முற்றிலும் தவறு மற்றும் அதிர்ச்சியூட்ட கூடியது என கூறியுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவி பதவியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இதுபோன்று அவர் பேசுவது வெட்கக்கேடானது. அது ஒரு கண்ணியமிக்க பதவி. அது மதிக்கப்பட வேண்டும்.

அவர் இதுபோன்று பேசினால், சமூகத்தின் மீதமுள்ள பெண்களுக்கு என்ன செய்தி சென்று சேர்க்கப்படும்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். அவரை, டெல்லி துணை நிலை கவர்னர் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று பர்க்கா கூறியுள்ளார்.


Next Story