'ஒரே நாடு ஒரே தேர்தல்' ராம் நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்


ஒரே நாடு ஒரே தேர்தல்  ராம் நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2023 9:38 AM GMT (Updated: 16 Sep 2023 11:42 AM GMT)

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி அமைத்தது.

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். கடந்த 1967-ம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து வந்தது. பிறகுதான் தனித்தனியாக நடக்கத் தொடங்கியது. இதனால், ஆண்டில் பல மாதங்கள் தேர்தல் மனநிலையிலேயே கழிந்து விடுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த முடிவது இல்லை.

மேலும், அடிக்கடி தேர்தல் நடத்துவதால் நிதிச்சுமையும் அதிகரிக்கிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்க வேண்டி உள்ளது. இந்த சிரமங்களால், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18-ந் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. 22-ந் தேதிவரை 5 நாட்களுக்கு அத்தொடர் நடக்கும். அதில், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்தும் மசோதாவும் அவற்றில் அடங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி அமைத்தது. இந்தக் குழுவில் உள்துறை மந்திரி அமித்ஷா ,மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் ராம் நாத் கோவிந்த் தலைமையில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story