கம்போடிய அரசர் இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை; உற்சாக வரவேற்பு


கம்போடிய அரசர் இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை; உற்சாக வரவேற்பு
x

இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தந்த கம்போடிய அரசர் நரோடம் ஷிகாமணிக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

கம்போடிய அரசர் நரோடம் ஷிகாமணி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக புதுடெல்லிக்கு இன்று மதியம் வருகை தந்த அவரை மத்திய வெளிவிவகார மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளரான அரிந்தம் பக்சி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், கம்போடிய அரசர் நரோடம் ஷிகாமணி இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தின்படி, டெல்லிக்கு வருகை தந்து உள்ளார். அவரை மத்திய வெளிவிவகார மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்று உள்ளார்.

இந்தியா மற்றும் கம்போடியா இடையேயான நாகரீக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமையும் என தெரிவித்து உள்ளார்.

அரசரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான 70 ஆண்டு கால தூதரக உறவுகளின் கொண்டாட்டத்தின் உச்ச பகுதியாக இருக்கும். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு பின்னர் கம்போடிய அரசரின் இந்த பயணம் அமைந்து உள்ளது.

கடைசியாக, அரசர் நரோடம் ஷிகாமணியின் தந்தை, கடந்த 1963-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

வரும் மே 30-ந்தேதி அரசர் ஷிகாமணி, ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தருகிறார். அவருக்கு திரவுபதி முர்மு விருந்தளித்து சிறந்த முறையில் வரவேற்பு தருகிறார்.


Next Story