நாட்டின் முதல் வாக்காளர் 106 வயதில் மரணம்
நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல் வாக்காளர்
நமது நாட்டின் முதல் வாக்காளர் என அறியப்படுபவர், சியாம் சரண் நேகி (வயது 106). முன்னாள் ஆசிரியர். இவர் இமாசல பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான கல்பாவில வசித்து வந்தார்.
நேற்று காலையில் இவர் தனது இல்லத்தில் மரணம் அடைந்தார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பிலும் ஜனநாயகக்கடமை
இவர் இறப்பிலும் ஜனநாயகக்கடமையை ஆற்றி விட்டுச்சென்றிருக்கிறார் என்பது இங்கு பதிவு செய்யத்தக்கது. அதுமட்டுமின்றி, நாட்டின் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆளுகிற இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் 100 வயது கடந்த முதியோருக்கு தபால் வாக்கு அளிக்கிற வசதியை தேர்தல் கமிஷன் கொண்டு வந்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி சியாம் சரண் நேகி கடந்த 2-ந் தேதி தபால் வாக்கு போட்டுள்ளார். இவர் வாக்குப்பதிவு செய்திருப்பது 34-வது முறை என தகவல்கள் கூறுகின்றன.
16 மக்களவை தேர்தல்களில் ஓட்டு
1917-ம் ஆண்டு பிறந்த இவர், 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் முதல்முறையாக ஓட்டு போட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல்களில் 16 முறை வாக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு தேர்தலில்கூட இவர் வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை.
2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, இவர்தான் நாட்டின் முதல் வாக்காளர் என்று தேர்தல் கமிஷ்ன அறிவித்து, அதன்பின்னர் நடந்த தேர்தல்களில் அவர் வாக்கு அளிக்க வந்தபோதெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது,
2014-ம் ஆண்டு முதல் இவர் மாநில தேர்தல் சின்னமாக திகழ்ந்து வந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
இவரது மறைவுக்கு, இமாசல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மாண்டி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அனுதாபம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
டெல்லியில் இன்று காலையில் நான் புறப்பட்டபோது சியாம் சரண் நேகியின் மறைவுச்செய்தி கிடைத்தது. 106 வயதான நேகி, தனது வாழ்நாளில் 30 முறைக்கு மேல் வாக்குப்பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இவர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளார். மரணத்துக்கு முன்புகூட தனது ஜனநாயகக்கடமையை ஆற்றிவிட்டுச்சென்றிருக்கிறார்.
அவருக்கு நான் கனத்த இதயத்துடன், தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரது மறைவுக்கு தேர்தல் கமிஷன் அனுதாபம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.