மாநிலங்களவை தேர்தல்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் வெற்றி


மாநிலங்களவை தேர்தல்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் வெற்றி
x

Image Courtacy: ANI

மாநிலங்களவைக்கு 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் மீதம் உள்ள 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மராட்டியம், பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட், அரியானா, சத்தீஸ்கார், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 எம்.பி.க்களுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் போட்டி அதிகமாக இருப்பதால் ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றன. மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மராட்டியம்

மராட்டியத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம், பா.ஜ.க.வுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிக்கல் இருந்தது. பா.ஜ.க. 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தியது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவியது.

இந்நிலையில் மராட்டியத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. 285 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

கர்நாடகா

கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிட்டனர். பா.ஜ.க.-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து போட்டியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் முதல் வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திரா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் தோல்வியடைந்தனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் 4 இடங்களுக்கான ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும், பா.ஜ.க. ஒரு வேட்பாளரும், பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சையாக ஒருவரும் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.

அரியானா

அரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது.


Next Story