ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்


ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்
x

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட இதுவரை அனுமதி வழங்காததால் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உப்பள்ளி;

கோர்ட்டில் வழக்கு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பல ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தினர் தங்களது மத வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஈத்கா மைதானம் இந்து சமுதாயத்தினருக்கு சொந்தமானது என்று கூறியும், இந்துக்கள் வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு ஈத்கா மைதான உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு இவ்வழக்கில் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் முஸ்லிம்கள் தங்களது மத வழிபாடுகளை நடத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஈத்கா மைதானம் மாநகராட்சி வசமே இருக்கும். பிற மதத்தினர் ஏதேனும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று நடத்தலாம் என்று கோர்ட்டு கூறியது.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஈத்கா மைதானத்தில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இதுவரை மாநகராட்சி உரிய அனுமதியை வழங்கவில்லை. இதுபற்றி அறிந்த ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் நேற்று உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஈத்கா மைதானத்தில் கொண்டாட அனுமதி வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த மாநகராட்சி மேயர் ஈரேஷ் அஞ்சட்டகேரி, துணை மேயர் உமா முகுந்தா ஆகியோர் உடனடியாக அலுவலகத்துக்கு வந்தனர்.

பரபரப்பு

அவர்கள் பிரமோத் முத்தாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி கூட்டம் நடத்தி, அதில் அனைத்து கவுன்சிலர்களின் கருத்து கேட்டு அனுமதி வழங்குவதாக மேயர் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பிரமோத் முத்தாலிக் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story