முதன்முறையாக தேசிய சுற்றுலா காலண்டர் பட்டியலில் திருப்பதி பிரமோற்சவ விழா
முதன்முதலாக 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா தேசிய சுற்றுலா காலண்டரில் சேர்க்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார்.
முதன்முதலாக 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா தேசிய சுற்றுலா காலண்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் 'நிகழ்வுகள் மற்றும் திருவிழா' பிரிவின் கீழ் 'திருமலை பிரம்மோத்சவலு' என பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டினரிடையே ஆன்மீகச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலா கோட்ட மேலாளர் (திருப்பதி) கிரிதர் ரெட்டி கூறுகையில்:- ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், திருவிழாவின்போது நடைபெறும் வாகன சேவைகள் பற்றி பலருக்கு தெரியாது.
இப்போது மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிகழ்வை அங்கீகரித்திருப்பதால், விழா பற்றிய விரிவான விளக்கம் இணையதளத்தில் குறிப்பிடப்படும், மேலும் அதிகமான வெளிநாட்டினர் திருப்பதி வருவதை ஊக்குவிக்கும் என்றார்.
திருப்பதி எம்.பி மட்டிலா குருமூர்த்தி, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதி தேசிய சுற்றுலா காலண்டரில் திருமலை மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி பிரம்மோத்ஸவங்களின் அட்டவணையை சேர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.