கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சுப்ரீம் கோர்ட்டு கருத்து
பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்து கட்டாயமாக செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்தியபிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. மதம் மாறுவதற்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அளிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன' என வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு், 'கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது உண்மை என்றால் அது தீவிரமான விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம், மத சுதந்திரத்தையும் பாதிக்கலாம்' என தெரிவித்தனர். மேலும் 'கட்டாய மதமாற்றத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரத்தை வருகிற 22-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.