இந்தியாவில் வளாகங்களை திறக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு


இந்தியாவில் வளாகங்களை திறக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு
x

இந்தியாவில் கல்வி வளாகங்களை திறப்பதற்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் காத்திருப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

புதிய கல்வி கொள்கை

உலகின் 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்காக பதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் கல்வி வளாகங்களை திறப்பதற்கு பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, இந்த வளாகங்களுக்காக இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கு காத்திருப்பதாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

ஏராளமான பல்கலைக்கழகங்கள்

இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சர்வதேச நியமனங்கள் மற்றும் விவகாரங்கள் துறை இயக்குனர் ரிஷன் சேகர் பி.டி.ஐ. நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'வெளிநாட்டு கல்வி வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்குவதற்காக ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ஏராளமான பல்கலைக்கழகங்கள் காத்திருக்கின்றன' என்றார்.

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற கல்வியை வழங்குவதாக தெரிவித்த ரிஷன் சேகர், ஆனால் விதிமுறைகளின் காரணமாக இந்தியாவில் இதுவரை அதை செய்யவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவிலும் இதையே நாம் பின்பற்ற முடியும் என்றாலும் முதலில் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர் பரிமாற்றம்

இதைப்போல பல்கலைக்கழகத்தின் தலைமை கல்வி அதிகாரி டாம் ஸ்டீர் கூறுகையில், 'கல்வித்துறையில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஈடுபாடு ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றம் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி கொள்கை மிகவும் நேர்மறையான கொள்கை. இது சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிப்பதை மிகவும் அணுகக்கூடியதாக மட்டுமல்லாமல் பொருத்தமானதாகவும் மாற்றும்' என்று தெரிவித்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் இந்த உயர் அதிகாரிகள், இளங்கலை டிஜிட்டல் வணிக பட்டப்படிப்பு தொடர்பாக இந்திய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெல்லி வந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 1,600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story