வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை


வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:45 PM GMT)

வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்த்தஹள்ளி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிவமொக்கா-

வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்த்தஹள்ளி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா அலகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்ரப்பா (வயது 57) மற்றும் ரசித் (30). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீர்த்தஹள்ளி வனத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த 2021-ம் ஆண்டு வனத்துறை அதிகாரி கிரண்குமார் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரி அபிஷேக் காவடி ஆகியோர் அலகேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அப்புறப்படுத்த சென்றனர்.

வாக்குவாதம்

அப்போது அங்கு பத்ரப்பா, ரசித் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை அப்புறப்படுத்தி கொண்டு இருந்த வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, பணிசெய்ய விடாமல் பத்ரப்பா, ரசித் தடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் ஆகும்பே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்ரப்பா மற்றும் ரசித்தை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து பத்ரப்பா, ரசித் ஜாமீனில் வெளியே வந்தனர்.

தலா 3 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு தீர்த்தஹள்ளி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், வனத்துறை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த பத்ரப்பா, ரசித் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story