செல்போன் வாங்கி நூதன முறையில் மோசடி செய்த மாணவர்
செல்போன் வாங்கி மோசடி செய்த மாணவர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் வசிக்கும் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெங்களூரு:
செல்போன் வாங்கி மோசடி செய்த மாணவர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் வசிக்கும் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டது ெதரியவந்தது.
என்ஜினீயரிங் மாணவர் கைது
பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீசார், ஆன்லைன் நிறுவனத்தில் ஐபோன்கள், மடிக்கணினி வாங்கி மோசடி செய்ததாக என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த மாணவர் மத்திகெரேயை சேர்ந்த சிராக் குப்தா என்பதும், தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பதும் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் விலை உயர்ந்த ஐபோன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப ஒப்படைத்து விடுவதாக சிராக் கூறுவார்.
அந்த ஆன்லைன் நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும். அந்த சந்தர்ப்பத்தில் ஆன்லைன் நிறுவனத்தின் இணையதளத்தை அமெரிக்காவில் வசிக்கும் சிராக் நண்பர்கள் முடக்கி, ஆன்லைன் நிறுவன ஊழியரிடம் ஐபோன் ஒப்படைத்து விடுவது போன்று செய்து விடுவார்கள்.
அமெரிக்க நண்பர்கள் உதவியுடன்...
ஆனால் ஐபோன் சிராக்கிடமே இருக்கும். அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்தும் ஐபோன் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சிராக்கிற்கு பணமும் திரும்ப கிடைத்து விடும். அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த நூதன மோசடியில் சிராக் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் மற்றும் மடிக்கணினி நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சிராக் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்த போது ரூ.30 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணமும் தறபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யஷ்வந்தபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். சிராக்கின் கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.