முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை : காரணம் என்ன? போலீசார் விசாரணை
கேரளாவில் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துணை போலீஸ் சூப்பிரண்டு
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 60). இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது சரிதா நாயர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வந்தார். அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி ஹரிகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே ஹரி கிருஷ்ணனின் வீடு, பிளாட்டுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை ஹரிப்பாடு ஏலூர் பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளம் அருகே ஹரிகிருஷ்ணன் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஹரிப்பாடு போலீசார் விரைந்து வந்து ஹரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே ஹரிகிருஷ்ணனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சோதனை செய்த போது அவரது சட்டை பையில் ஹரிகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது
அதில் உருக்கமான தகவல்களை ஹரிகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அந்த கடிதத்தில் என்ன தகவல் இருந்தது என்பதை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
காரணம் என்ன?
முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.