ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தியின் யாத்திரையில் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பங்கேற்றார்.
லக்னோ,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த 24-ம் தேதி டெல்லியை சென்றடைந்தது.
பின்னர், கடந்த 24-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றிய பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பாரத் ஜோடோ யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. டெல்லியில் தொடங்கிய யாத்திரை தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 3 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் 'ரா'(RAW) உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் பங்கேற்று, ராகுல் காந்திக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.