காஷ்மீர் என்கவுண்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சோபியான் மாவட்டத்தின் டார்ச் மற்றும் மூலு ஆகிய 2 இடங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் டார்ச் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 பயங்கரவாதிகளும், மூலு பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் ஒரு பயங்கரவாதியும் என மொத்தம் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள், புல்வாமாவில் கடந்த 24-ம் தேதி மேற்குவங்காளத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கிலும், கடந்த 2-ம் தேதி போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.