கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை..!! நிபுணர்கள் கருத்து


கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை..!! நிபுணர்கள் கருத்து
x

கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சீனாவில் 'பிஎப்.7' உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளிலும் இந்த தொற்று பரவல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். 27 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை (முன்எச்சரிக்கை டோஸ்) போட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 3-வது, 4-வது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்தியாவிலும் 4-வது டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி) போட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்போது அது தேவை இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இதுபற்றிய நிபுணர்கள் கருத்து வருமாறு:-

சத்யஜித் ராத் (பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே):-

சீனா போன்ற நிலையை இங்கே எதிர்பார்க்க எந்த காரணமும் இல்லை. இந்தியாவில் பரந்த அளவில் தொற்று ஏற்பட்டு, கூடுதலாக தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களிலும் கொரோனா பரவிவிட்டு, தற்போது உலகளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உருமாற்றம் எல்லா இடங்களிலும் உள்ளது.

நாம் அடிப்படையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்காணிக்க வேண்டும். புதிதாக தோன்றுகிற உருமாறிய வைரஸ்களுக்கு ஏற்ற வகையில் அடுத்த தலைமுறை தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும்.

2-வது பூஸ்டர் டோஸ் தேவை இல்லை

வினீதா பால் (நோய் எதிர்ப்பு நிபுணர்,இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே):-

இந்தியாவில் ஒரு வருடத்துக்கு முன்பே ஒமைக்ரான் அலை தாக்கிவிட்டது. அந்த தொற்று போதுமான அளவுக்கு ஒமைக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவில்லை என்றால், இந்தியாவில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகள் எதுவும் கூடுதல் பாதுகாப்பை அளிக்காது. எனவே பல்வேறு காரணங்களால் 4-வது டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ்) இப்போது தேவை இல்லை.

18 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான இந்தியர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதிகளவிலான மக்கள் 2-வது, 3-வது டோஸ் செலுத்திக்கொள்ளவில்லை. எனவே மேலும் ஒரு பூஸ்டர் டோஸ் என்றால் அது பதற்றமான சூழலைத்தான் ஏற்படுத்தும். சீனாவில் காணப்படுகிற பி.எப்.7 மிக அரிதாகவே இங்கு காணப்படுகிற நிலையில், பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுகிறபோது, அவற்றில் குறைவான எண்ணிக்கையிலானவற்றை மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தினாலே போதும்.

கொரோனா பற்றிய அச்சம் எழுகிற நிலையில், அதை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பயன்படுத்த வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி தேவை

டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் (முன்னாள் தலைவர், இந்திய டாக்டர்கள் சங்கம் ஐஎம்ஏ):-

பொது சுகாதார நிபுணர்கள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவில் வெளிப்படுகிறார்கள். இதன் விளைவாக அதிக அளவு வைரஸ் சுமைகளின் ஒட்டுமொத்த குவிப்பு மற்றும் வைரஸை மீண்டும் வெளிப்படுத்துவது சுகாதார சமூகத்தினரிடையே அதிக தொற்றுநோயைத் தூண்டும். அதை எதிர்த்து போராடுவதற்கு அவர்களுக்கு அந்த வைரசுக்கு எதிராக அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்று அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story