கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி
கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரை சேர்ந்தவர் தீபக் பாண்டே (வயது 30). கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கூரியர் ஒன்று வந்தது. கூரியரில் வந்த பார்சலை தீபக் பிரித்து பார்த்தார். அப்போது அதனுள் பரிசு கூப்பன் ஒன்று இருந்தது. இதையடுத்து அந்த பரிசு கூப்பனை தீபக், தேய்ந்து பார்த்தார். அப்போது ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்திருப்பதாக அதில் இருந்தது.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த தீபக், உடனடியாக பரிசு கூப்பனில் இருந்த உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்துள்ளது. விரைவில் அந்த கார் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார்.
மேலும் அந்த நபர், காரை அனுப்பி வைக்க வரி செலுத்த வேண்டி உள்ளது. அதற்கான பணத்தை நீங்கள் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய தீபக்கும் பணம் செலுத்த ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் பல்வேறு தவணைகளில் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.90 ஆயிரம் வரை செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு கார் எதுவும் வரவில்லை.
இந்த நிலையில் தீபக், அந்த நபரை தொடர்புகொள்ள முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.90 ஆயிரத்தை மர்மநபர் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தீபக், மங்களூரு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.