கர்நாடகத்தில் 11-ந்தேதி முதல் பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; இலவச மின்சாரம், 10 கிலோ அரிசி திட்டம் ஜூலை 1-ந்தேதி அமல் - சித்தராமையா அதிரடி அறிவிப்பு
கர்நாடகத்தில் வருகிற 11-ந்தேதி முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டமும், ஜூலை 1-ந்தேதி முதல் இலவச மின்சாரம், 10 கிலோ அரிசி வழங்கும் திட்டமும், ஆகஸ்டு 15-ந்தேதி முதல் இல்லத்தரசி களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
5 திட்டங்களுக்கு ஒப்புதல்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். இதற்கிடையே சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2,000, சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், யுவநிதி திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு தலா ரூ.1,500, அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த 5 வாக்குறுதிகளுக்கும் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கி அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர். அதன்படி இந்த 5 திட்டங்களுக்கும் கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 5 திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில்மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 5 இலவச திட்டங்களையும் செயல்படுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இ்ந்த கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 2.45 மணி வரை 3¾ மணி நேரம் நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலவச மின்சாரம்
சட்டசபை தேர்தலின்போது நாங்கள் மக்களுக்கு 5 முக்கிய உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தோம். அந்த வாக்குறுதிகளுக்கு முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கிவிட்டோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இன்று(நேற்று) எனது(சித்தராமையா) தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் ஆழமாக விவாதித்து முடிவு எடுத்துள்ளோம். அந்த 5 திட்டங்களையும் அமல்படுத்துவது என்று முடிவு எடுத்துள்ளோம்.
அதன்படி முதல் வாக்குறுதி கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
வீடுகளுக்கு தலா 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஆனால், கடந்த 12 மாதங்களில் வீடுகள் பயன்படுத்திய மின்சார அளவை கணக்கிட்டு அதன் மாத சராசரியை விட கூடுதலாக 10 சதவீத மின்சாரத்தை பயன்படுத்தலாம். அதற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை. அதற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் அவற்றுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
அனைவருக்கும் பொருந்தும்
2-வது வாக்குறுதி, கிரக லட்சுமி திட்டமான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும். இதில் பயன் பெற விரும்புவோர் வருகிற 15-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க காலஅவகாசம் ஒரு மாதம் வழங்கப்படுகிறது. ஜூலை 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதற்கு ஆதார், வங்கி கணக்கு எண் வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
கூட்டு குடும்பமாக இருந்தால் மாமியாருக்கா? அல்லது மருமகளுக்கா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடலாம். யாருக்கு இந்த தொகையை வழங்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோர் என அனைவருக்கும் பொருந்தும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவோர், விதவை உதவித்தொகை பெறுவோருக்கும் இந்த திட்டம் பொருந்தும். அரசு பணியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
இலவசமாக பயணிக்கலாம்
3-வது வாக்குறுதி, சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்று கூறினோம். இந்த திட்டத்தை வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறோம். கர்நாடகத்தில் அரசு பஸ்களில் அனைத்து பெண்களும், மாணவிகளும் இலவசமாக பயணிக்கலாம். குளுகுளு பஸ், சொகுசு பஸ்களை தவிர மற்ற அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களும், மாணவிகளும் இலவசமாக பயணிக்கலாம். பெங்களூருவில் ஓடும் பி.எம்.டி.சி. பஸ்கள், கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.
கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பெண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும். மீதமுள்ள இருக்கைகள் ஆண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பி.எம்.டி.சி பஸ்களில் இருக்கைகள் ஒதுக்கீடு கிடையாது. பெண்களும், மாணவிகளும் கர்நாடகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக அரசு பஸ்களில் பயணிக்கலாம்.
வேலையில்லாத பட்டதாரிகள்
4-வது வாக்குறுதி யுவநிதி திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். அதன்படி பட்டம் பயின்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் படித்தோருக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும்.
இதற்காக விண்ணப்பிக்க 6 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இந்த 6 மாதத்தில் வேலை கிடைக்காதவர்கள் இதில் பயன் பெறலாம். 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். அதற்கு இடையில் அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ கிடைத்தால், அத்தகையவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்குவது நிறுத்தப்படும். பட்ட படிப்புகள் மட்டுமின்றி மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளை முடித்தோரும் இதில் பயன் பெற தகுதியானவர்கள்.
10 கிலோ அரிசி
5-வது வாக்குறுதி அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு தற்போது தலா 5 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இதை அதிகரித்து தலா 10 கிலோ அரிசியாக வழங்கப்படும். இந்த திட்டம் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் தொடங்கப்படும்.
இந்த மாதத்திற்குரிய அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுவிட்டன. மேலும் தற்போது கிடங்குகளில் அரிசி இருப்பு போதுமானதாக இல்லை. அதனால் இந்த திட்டத்தை வருகிற 1-ந் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம்.
2 கோடி வேலை வாய்ப்புகள்
நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். முன்பும் நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டோம். இப்போதும் அதே போல் நடந்து கொள்கிறோம். பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அவ்வாறு டெபாசிட் செய்தாரா?. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், நல்ல நாட்கள் வரும் என்றும் மோடி கூறினார். அவர் சொன்னபடி அவற்றை ஏற்படுத்தினாரா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.