பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்


பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்
x
தினத்தந்தி 15 May 2023 9:45 PM GMT (Updated: 15 May 2023 9:45 PM GMT)

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

15 நிபந்தனைகளுடன் பேனா நினைவு சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மீனவர் மோகன் உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் பொதுநல மனுவை கடந்த பிப்ரவரி 8-ந்தேதி தாக்கல் செய்தார்.

அந்த பொதுநல மனுவில், மெரினா கடற்கரையில் திட்டமிடப்பட்டுள்ள பேனா நினைவுச் சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்த திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது. பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்னத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே, பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்துசெய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பொதுநல மனுவுக்கு உதவிடும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் வக்கீல் என்.ஆனந்த் கண்ணன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில் பேனா நினைவு சின்னம் அமைக்க நினைவிட வளாகத்திலேயே போதுமான இடம் உள்ளது. இதுவரை எந்தவொரு அரசியல்கட்சித் தலைவருக்கும் கடலில் நினைவு சின்னம் இல்லை. தற்போது இந்த நினைவு சின்னத்துக்கு அனுமதியளித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி பிற அரசியல் கட்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகிவிடும்.

பல்வேறு அம்சங்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் கருத்தில் கொள்ளாமல் அவசரகதியில் தமிழ்நாடு அரசின் துறைகள் நினைவு சின்னத்துக்கு அனுமதி அளித்துள்ளன. பேனா நினைவுச் சின்னத்தால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story