பாஜகவுக்கு மாற்றாக தேசிய கட்சி; தெலுங்கானா முதல்-மந்திரியின் முடிவை கடுமையாக விமர்சித்த மத்திய மந்திரி!
மத்திய மந்திரி ஜி கிஷன் ரெட்டி, தேசிய கட்சி தொடங்க உள்ள தெலுங்கானா முதல்-மந்திரியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர ராவ் தேசிய அளவில்பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்ற புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 19ம் தேதி புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சிக்கான முறையான அறிவிப்பை ஜூன் இறுதிக்குள் புதுடெல்லியில் அவர் வெளியிட உள்ளார்.
இந்த செய்தி வெளிவர தொடங்கியதை தொடர்ந்து, மத்திய கலாச்சாரத் துறை மந்திரி ஜி கிஷன் ரெட்டி, தேசிய கட்சி தொடங்க உள்ள தெலுங்கானா முதல்-மந்திரியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மந்திரி ஜி கிஷன் ரெட்டி கூறியதாவது, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி அமைக்கலாம் ஆனால் ஜனநாயக ரீதியாகவும் செயல்பட வேண்டும்.
கட்சியில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் முதல்வர் கே.சி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள். அதனால் தான் தேசிய கட்சியை வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அவர் தனது குடும்பத்திற்குள் நாட்டைப் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த தேசிய கட்சி கருத்து கொண்டுவரப்பட்டது. குடும்ப ஆட்சியை ஆதரிப்பதா அல்லது நாட்டுக்காக பாடுபடுவதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.