குப்பை இல்லாத கேரளா; கடுமையான விதிகள், அபராதத்திற்கு அரசு ஒப்புதல்
2024-ம் ஆண்டுக்குள் குப்பை இல்லாத கேரளாவை உருவாக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
கொச்சி,
கேரள மந்திரி சபையில் சமீபத்தில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சி சட்டம் ஆகிய இரு சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை அபராதங்கள் மற்றும் தண்டனைகளை அதிகரிப்பதுடன் தொடர்புடையவை ஆகும்.
இதுபற்றி மந்திரி ராஜேஷ் கூறும்போது, அரசின் கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் அமையும். 2024-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதிக்குள் திட கழிவு இல்லாத கேரளாவை உருவாக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது என கூறியுள்ளார்.
இதன்படி, பொது இடங்களில் கழிவுகளை மக்கள் தூக்கி எறிவது கண்டறியப்பட்டால், அபராதம் கடுமையாக இருக்கும். இதற்கு முன்பு பொது இடங்களில் குப்பை போடுவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த அபராத தொகை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.