ஜார்கண்டில் கோர விபத்து: டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தில் ஒருவர் பலி


ஜார்கண்டில் கோர விபத்து: டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தில் ஒருவர் பலி
x

ஜார்கண்ட் மாநிலத்தில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்ததில் 3 பஸ்கள் பெருத்த சேதம் அடைந்தன. ஒருவர் பலியானார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை எண்.17-ல் ஹன்சிதா நகரை நோக்கி நேற்று கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த டேங்கர் லாரி அங்கு தவதந்த் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தறிகெட்டு ஓடி கவிழ்ந்து, வெடித்து தீப்பிடித்தது.

அப்போது அந்தப் பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்த 3 பஸ்களுக்கும் தீ மின்னல் வேகத்தில் பரவி எரியத்தொடங்கியது. அந்தப் பகுதியில் உள்ள மரங்களும் இந்தத் தீயில் இருந்து தப்பவில்லை.

ஒருவர் பலி

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர விபத்தில் ஒருவர் சிக்கி உடல் கருகி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அம்பர் லக்ரா கூறுகையில், "டேங்கர் லாரி கவிழ்ந்து, பின்னர் வெடித்து தீப்பிடித்து, அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 பஸ்களையும் நாசமாக்கி விட்டது. இந்த தீயில் அந்த பகுதியில் பல மரங்களும் எரிந்தன" என தெரிவித்தார்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.


Next Story