பொது சிவில் சட்ட விவகாரம்: சட்ட கமிஷனில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம்
பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக சட்ட கமிஷனில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
லக்னோ,
பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை மத்திய சட்ட கமிஷன் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது.
அந்தவகையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த வரைவு கடிதத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து வாரியத்தின் செய்தி தொடர்பாளர் காசிம் ரசூல் இல்யாஸ் கூறுகையில், 'அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எப்போதும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவே இருந்து வருகிறது. பல மதங்கள் மற்றும் கலாசாரங்களை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரேயொரு சட்டத்தை மட்டும் திணிப்பது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும்' என தெரிவித்தார்.
பழங்குடியினர் மட்டுமின்றி, ஒவ்வொரு மத சிறுபான்மையினரும் பொது சிவில் சட்ட வரம்புக்கு வெளிேய இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்தாகும் என்றும் அவர் கூறினார்.