சட்ட ஆணையத்தின் பரிசீலனையின் கீழ் பொது சிவில் சட்டம் உள்ளது: மத்திய மந்திரி மேக்வால்


சட்ட ஆணையத்தின் பரிசீலனையின் கீழ் பொது சிவில் சட்டம் உள்ளது:  மத்திய மந்திரி மேக்வால்
x
தினத்தந்தி 5 Feb 2024 11:54 AM GMT (Updated: 5 Feb 2024 1:01 PM GMT)

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் பற்றிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கோவாவில், போர்ச்சுகீசிய ஆட்சி காலத்தில் இருந்து பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதேபோன்று, பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், அந்த மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதற்கான வழியேற்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு 4 நாட்கள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

இந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை, பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் பெறும்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டம் பற்றி மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இன்று கூறும்போது, சட்ட ஆணையத்தின் கீழ் அது பரிசீலனையில் உள்ளது என்றும் ஆலோசனை நடைமுறையானது தொடர்ந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனை மாநிலங்கள் மேம்படுத்தலாம். நடைமுறைப்படுத்தலாம். இதுபற்றி சட்ட ஆணையத்திடம் இருந்து விரைவில் அறிக்கை பெறுவோம். பின்னர் அதுபற்றி உங்களுக்கு தெரிவிக்கப்படும் என மேக்வால் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் பற்றிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இந்த மசோதாவானது, திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சட்டங்கள் ஆகியவற்றில் மாநிலத்தில், எந்தவித மதவேற்றுமையும் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சீரான ஒரு சட்ட வடிவம் கிடைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.


Next Story