பெங்களூருவில் சாலையோர கடையில் காய்,கனி வாங்கிவிட்டு யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை - ஆச்சரியப்பட்ட ஜெர்மனி மந்திரி
ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி இந்தியா வந்துள்ளார்.
பெங்களூரு,
ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருப்பவர் வால்கர் விஸ்சிங். இவர் பெங்களூருவில் நடைபெற்றும் டிஜிட்டல் மந்திரிகள் மட்டத்திலான ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், விஸ்சிங் நேற்று பெங்களூவில் உள்ள சாலையோர காய்கறி கடையில் காய்கறி வாங்கினார். பின்னர், காய்கறி வாங்கியதற்கான பணம் 100 ரூபாயை யுபிஐ பணபரிவர்த்தை மூலம் தனது செல்போனில் இருந்து செலுத்தினார். இது மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்ததாக அவர் கூறினார்.
விஸ்சிங் காய்கறி கடையில் காய்கறி வாங்கியதையும், அதற்கான பணத்தை யுபிஐ மூலம் செலுத்தியது தொடர்பாக ஜெர்மனி தூதரகம் வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் ஜெர்மனி தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் ஒரு வெற்றி. யுபிஐ வசதி டிஜிட்டல் பணபரிவர்த்தனையை நொடியில் சாத்தியமாக்கியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதை பயன்படுத்துகின்றனர். ஜெர்மனி டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி விஸ்சிங் முதல்முறையாக யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனையை அனுபவப்பட்டுள்ளார். இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது' என தெரிவித்துள்ளது.